எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் பல ஆண்டுகள் முன்பு தமிழில் மொழிபெயர்க்கப்ட்ட இக்கட்டுரை ‘இயற்கையை அறிதல்’ என்னும் அதே தலைப்பில், தன்னறம் நூல்வெளி வாயிலாக தற்போது வெளியீடு கொள்கிறது. இந்நூலை வடிவமைத்து அச்சாக்கும் வாய்ப்பு அமைந்ததில் எல்லையற்ற மகிழ்வு கொள்கிறோம். ஒவ்வொரு தனிமனித அகக்குரலும் சம அளவு பிரபஞ்சத்தகுதி உடையவை; ஆன்ம நிலையில் எல்லாவுமே ஏற்றத்தாழ்வுகளற்றது என்பதனையும், தனிமனித மனம் இயற்கையை அணுகும் தரிசனத்தை தனிமை, நுகர்வு, அழகு, மொழி, கட்டுப்பாடு, கருத்துமுதல் வாதம், ஆத்மா, சாத்தியக்கூறுகள் என்னும் எட்டு உபதலைப்புகளின் வழியாக விவரித்துரைக்கிறது இந்நூல்.
தன் உள்ளடக்கத்தின் கட்டுமானத்தாலும், அதன் அர்த்த ஆழச்செறிவினாலும் நம்மை நோக்கி ஓர் அறைகூவலை எழுப்பும் ஒவ்வொரு படைப்பும், நம்முடைய அகவிடுதலையை வார்த்து சீர்திருத்துகிறது. அவ்வகையில், தமிழில் நிகழ்ந்த முக்கியமான மொழிபெயர்ப்பில் இக்கட்டுரையும் தனிச்சிறப்பு கொள்கிறது. ஒவ்வொரு வாசக மனதும் அவசியம் வாசித்து விவாதிக்க வேண்டிய படைப்பு இது.




